ஆகமசாஸ்த்ரமும் ஆலயமும் பதஞ்சலி மகாபாஷ்யம்” என்ற நூலில் ஸ்கந்தன், விசாகன் ஆகிய தெய்வங்களின் வடிவங்களை அமைப்பது எப்படி என்ற விவரங்கள் தெரிய வருகின்றன.
தெய்வத்தின் இருப்பிடமான ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும் அவற்றில் நடத்தப்படும் நித்ய பூஜைகளுக்கும், உத்ஸவாதிகளுக்கும் முறையான விதிகளும், சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளும் உள்ள்ன. அத்தகைய விதிமுறைகள்தான் 'ஆகமசாஸ்த்ரம்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றன. ஆகவே ஆலயங்களின் தோற்றம் எவ்வளவு பழைமையானதோ, அதே அளவு பழைமையானவை நம் ஆகமங்களும்.
ஆலயங்களின் வடிவமைப்பு, அவை அமைய இருக்கும் ஸ்தலத்தைத் தேர்ந்தெடுக்கும் நியதிகள், விக்ரகங்களின் வடிவம், மூலஸ்தானத்திற்கும்-கர்ப்பக்ரகத்திற்கும், அதன் மேலுள்ள விமானத்திற்கும் உள்ள சமன்பாடுகள், அர்த்த மண்டபம், மகாமண்டபம், பிராகாரம், ஆகியவற்றிற்கான நீள, அகல, உயரங்களின் விகிதங்கள், விமானங்களின் வகைகள், ஸ்தலவிருக்ஷங்கள், தீர்த்தங்கள் எனப்படும் தெப்பக்குளங்கள் உருவாக்குதல், உத்ஸவ விக்ரகங்களின் அளவுகள், அம்சங்கள், நித்யபூஜை விதிகள், உத்ஸவ முறைகள், அர்ச்சகர்கள், ஸ்தபதிகள் ஆகியோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் போன்ற எல்லா அம்சங்களையும் நிர்ணயித்து நமக்கு வழிகாட்டும் சட்ட திட்டங்கள்தான் ஆகமங்கள் ஆகும்.
சில்பசாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், கட்டடக்கலை ஆகியவையும் ஆகமங்களுக்குள்ளே அடக்கம். அவற்றையும் ஒருங்கிணைத்துத்தான் ஆலயங்கள் பாரத நாட்டில் நிர்மாணிக்கப்பட்டன. அதிலும் தமிழ்நாட்டிலும், ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலும் (ஒரிஸா, வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஓரளவும்) ஆகம விதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுத்தான் ஆலயங்கள் உருவாக்கப்பட்டன; இன்றளவும் உருவாக்கப்படுகின்றன. (இதில் கேரள மாநிலக் கோவில்கள் மட்டும் (திருவனந்தபுரம் தவிர) விதிவிலக்குகளாக இருக்கின்றன.)
ஆகமங்கள் சைவ ஆகமங்கள் எனவும், வைஷ்ணவ ஆகமங்கள் (வைகானசம், பாஞ்சராத்ரம்) எனவும் இருவகைப்படும். சைவ ஆகமங்கள் இருபத்தெட்டும், சிவபெருமானின் 'சதாசிவ' முகங்களிலிருந்து அவராலேயே வெளியிடப்பட்டவை.
சிவனின் 'சத்யோஜாத' முகத்திலிருந்து காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம் என்று ஐந்து ஆகமங்களும், 'வாமதேவ' முகத்திலிருந்து தீப்தம், சூட்சுமம், ஸகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம் என்று ஐந்து ஆகமங்களும், 'அகோரம்' என்ற முகத்திலிருந்து விஜயம், நிசுவாசம், சுவாயம்புவம், அனலம், வீரம் என்று ஐந்து ஆகமங்களும், 'தத்புருஷ' முகத்திலிருந்து ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம் என்று ஐந்து ஆகமங்களும், 'ஈசான' முகத்திலிருந்து புரோக்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேசுவரம், கிரணம், வாதுளம் ஆகிய எட்டு ஆகமங்களும் வெளிப்பட்டன. (இவை 'சிவபேத ஆகமங்கள்' என்றும் 'ருத்ரபேத ஆகமங்கள்' என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.)
முதலில் சிவபெருமான், பத்து 'சிவர்களை'ப் படைத்து அவர்களுக்கு காமிகம் முதல் சுப்ரபேதம் வரையிலான பத்து ஆகமங்களையும் தம் சத்யோஜாதம், வாமதேவம் ஆகிய இரு முகங்கள் மூலம் உபதேசித்தாராம். பின்னர் அனாதிருத்ரர் முதலான பதினெட்டு ருத்ரர்களை உருவாக்கி அவர்களுக்கு விஜயம், முதல் வாதூளம் வரையிலான மீதி பதினெட்டு ஆகமங்களையும் தம் அகோர, தத்புருஷ, ஈசான முகங்கள் மூலம் உபதேசித்தாராம். பிறகு அஷ்டவித்யேஸ்வரர்கள் எனப்படும் அனந்தர், சூக்ஷ்மர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி ஆகியோருக்கு அந்தப் பதினெட்டு ஆகமங்களும் உபதேசிக்கப்பட்டனவாம். பின்னர் அனந்தேசர் என்பவருக்கும் இருபத்தெட்டு ஆகமங்களையும் சிவபெருமான் ஒருங்கே உபதேசித்தாரம். (இந்த உபதேசமானது மஹௌ சுக்ரமம் என்றழைக்கப்படுகிறது) இந்த விவரங்களை, சிவஞான முனிவரும், சிவாக்கிரயோகியும் தமது சிவஞானபோதம் என்ற தமிழ் நூலிலும் விவரித்துள்ளனர். அறுபத்தாறு சிவநேசச் செல்வர்கள் இந்த இருபத்தெட்டு சிவாகமங்களையும் அறிந்து கொண்டு மக்களுக்குப் பரவலாக எடுத்துச் சொன்னதாக திருமூலர் தமது திருமந்திரத்தில் விவரித்துள்ளார். இப்படியாக சிவபெருமானின் சதாசிவ முகங்களிலிருந்து வெளிப்பட்ட சைவ ஆகமங்கள் இருபத்தெட்டும், நாடுமுழுவதும் பரவி எல்லாராலும் பின்பற்றப்படுகின்றன.
அவ்வாறே வைகானஸ ஆகமத்தை மகாவிஷ்ணுவானவர் விகனஸ முனிவருக்கு உபதேசிக்க அவர் மூலமாக எல்லாருக்கும் தெரியவந்ததாம். வைகானஸ ஆகமத்திற்கு பகவத் சாஸ்திரம் என்ற பெயருமுண்டு. பாஞ்சராத்ரம் என்ற ஆகமம் குறிப்பிட்ட சில விஷ்ணு கோவில்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இருபத்தெட்டு சைவ ஆகமங்களுக்கு இருநூற்றியேழு (207) உப ஆகமங்கள் உள்ளன. காமிக ஆகமம் தான் சைவ ஆகமங்களிலேயே மிகப்பெரியது. அதுவும் தற்போது முழுமையாகக் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. பெரும்பாலான சிவன் கோவில்கள் காமிக மற்றும் காரண ஆகமங்களைப் பின்பற்றியே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
முதலில் ஒரேயொரு சந்நிதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நிர்மாணிக்கப்பட்ட தஞ்சாவூர் ஸ்ரீப்ரகதீஸ்வரர் ஆலயம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயம் இரண்டும் மகுட ஆகமத்துக்கு உதாரணங்கள். (அந்த ஆலயங்களில் உள்ள மற்ற சந்நிதிகளெல்லாம் பிற்காலங்களில் ஒவ்வொன்றாக ஏற்படுத்தப்பட்டவையே) அஜிதம், ரௌரவம், சுப்ரபேதம், மகுடம், வாதுளம் ஆகிய ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டவை மிகச்சில ஆலயங்களே.
கிராமதேவதைகளுக்கான ஆலயங்களை அமைப்பதற்கும், தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் குடும்ப க்ஷேமத்திற்காகவும், பாபங்களைப் போக்கிப் புண்யங்களைப் பெறுவதற்காகவும் மேற்கொள்ள வேண்டிய ஜபம், பூஜை, ஹோமம் ஆகியவற்றிற்கும் கூட, சிவாகமங்கள் வழிகாட்டுகின்றன. சைவ ஆகமங்களை வெளிப்படுத்தியதுடன், அவற்றையெலாம் தம் வடிவத்திலேயே ஏற்று விளங்குகிறார் சிவபெருமான்.
ஆகமங்களின் பெயரும் சிவபெருமானின் அங்கங்களும்: 1. காமிகம்-திருவடிகள், 2. யோகஜம்-கணைக்கால்கள், 3. சிந்தியம்-திருவடியின் விரல்கள், 4. காரணம்-கெண்டைக் கால்கள், 5. அஜிதம்-முழங்கால்கள், 6. தீப்தம்-துடைகள், 7. சூட்சுமம்-குஹ்யம் (பின்பகுதி), 8. சகஸ்ரம்-இடுப்பு, 9. அம்சுமான்-முதுகு, 10. சுப்ரபேதம்-நாபி, 11. விஜயம்-வயிறு, 12. நிசுவாசம்-ஹிருதயம், 13. சுவாம்புயம்-ஸ்தனங்கள், 14. அனலம்-கண்கள், 15. வீரம்-கழுத்து, 16. ரௌரவம்-செவிகள், 17. மகுடம்-கிரீடம், 18. விமலம்-திருக்கரங்கள், 19. சந்திரஞானம்-மார்பு, 20. பிம்பம்-திருமுகம், 21. புரோத்கிதம்-நாக்கு, 22. லலிதம்-கன்னங்கள், 23. சித்தம்-நெற்றி, 24. சந்தானம்-குண்டலங்கள், 25. சர்வோக்தம்-முப்புரிநூல்(பூணூல்), 26. பரமேஸ்வரம்-ஹாரங்கள், 27. கிரணம்-ரத்னாபரணங்கள், 28. வாதூளம்-வஸ்திரமும் பரிவட்டமும். வக்த்தாரம் (உபாகமம்)-சந்தனப்பூச்சு, காலோத்ரம் (உபாகமம்) பரிமள திரவியங்களும் புஷ்பங்களும்.
எல்லா ஆகமங்களிலும் உள்ள ஞானபாதமாகிய சித்தாந்தம்தான் சிவபெருமானுக்குரிய நைவேத்யமாக விளங்குகிறது. ஞானபாதமாகிய சித்தாந்தத்தின் கருத்துகளைக் கீழ்க்காணும் நூல்கள் விளக்குகின்றன :
நூலின் பெயரும்-நூலாசிரியரும் : 1. தத்வப் பிரகாசிகை - போஜதேவர், 2. தத்வ சங்க்ரஹம்-சத்யோஜோதி, 3. தத்வத்ரய நிர்ணயம் - சத்யோஜோதி, 4. ரத்னத்ரயம் - ஸ்ரீகண்டர், 5. போககாரிகை - சத்யோஜோதி, 6. நாதகாரிகை - பட்டராமகண்டர், 7. மோக்ஷகாரிகை - சத்யோஜோதி, 8. பரமோக்ஷ நிராச காரிகை - சத்யோஜோதி.
திருமூலர் தமது திருமந்திரத்தில் ஒன்பது ஆகமங்களின் சிறப்புகளை சாராம்சமாகக் கொடுத்துள்ளார். அகோர சிவாச்சாரியார் என்ற பெருமான் ஆகமங்களின் அடிப்படையில் சிவபூஜா விதி, நித்யபூஜாவிதி என்ற நூல்களை இயற்றியிருக்கிறார். அவரது பத்ததிப்படியே இன்றளவும் சிவாலயங்களில் அர்ச்சகர்கள் திருவனந்தல், காலசந்தி, இரண்டாம் காலம், உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் ஆகிய ஆறுகால பூஜைகளையும் குறைவற நிறைவேற்றி வருகிறார்கள். கோவில் உற்சவங்களும் அவ்வாறே நடத்தப்படுகின்றன.
ஒவ்வோர் ஆகமமும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களும் அந்த நான்கு பாதங்களிலும் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளன.
சரியை: இந்த முதல் பாதம்தான் ஆலய வழிபாட்டிற்கான நெறிமுறைகளை வகுத்துள்ளது. இப்பாதத்தில் வழிபடப்படுபவர்-பதி, வழிபாடு செய்பவர்-பசு, வழிபாட்டு சாதனங்கள்-பாசம்.
கிரியை: இப்பாதத்தில் 'தீக்ஷை' தான் முக்கியத்துவம் பெறுகிறது. இப்பாதத்தில் அனுக்ரஹம் புரியம் கர்த்தா-பதி, அவரது திருவருளைப் பெறும் தகுதியுள்ளவர்-பசு, ஆன்மாக்கள் நீக்கவேண்டியது-பாசம்
யோகம்: இப்பாதத்தில் 'தியானம்' முக்கியத்துவம் பெறுகிறது. இப்பாதத்தில் தியானிக்கப்படுபவர்-பதி, தியானிக்கும் கர்த்தா-பசு, தியானத்தின்போது மறக்கப்பட வேண்டியது-பாசம்.
ஞானம்: இதுதான் முதன்மையானது. இதில் பதி, பசு, பாசம் மூன்றும் நிரூபணம் செய்யப்படுகின்றன.
ஆகமப்படியான ஆலயங்கள்: இறைவழிபாடு மட்டுமல்லாது வேறு சில உட்கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டுதான் ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன என்பதை எல்லா ஆகமங்களும் கூறுகின்றன. எல்லா மக்களும் ஒன்று கூடிக் கடவுளை வழிபடும் இடம் என்பதோடு, எல்லாரும் எல்லாமும் ஒடுங்கும் இடமே ஆலயம்.
'ஆ' என்பது 'பசு' வையும், 'லயம்' என்பது, 'ஒடுங்குவது' என்பதையும் குறிக்கும். பசுக்களாகிய ஜீவாத்மாக்கள் தம் மும்மலங்களையும் நீக்கிவிட்டு 'பதி'யாகிய பரமாத்மாவிடம் ஒடுங்குவதற்குரிய இடமாகவும் ஆலயம் விளங்குகிறது. இதற்கு ப்ரத்யட்ச உதாரணங்களாகத் திகழ்ந்தவர்கள் 'நந்தனார்' (திருநாளைப் போவார் நாயனார்-சிதம்பரத்தில்) திருஞானசம்பந்தர் (திருவிடைமருதூரில்) மாணிக்கவாசகர் (சிதம்பரத்தில்)
உடம்பினை இருப்பிடமாகக் கொண்டு ஜீவாத்மா உறைவது போல, ஆலயத்தை இருப்பிடமாகக் கொண்டு பரமாத்மா விளங்குகிறார். தோல், குருதி, இறைச்சி, எலும்பு, மஜ்ஜை, மேதஸ், சுக்கிலம் ஆகிய ஏழுவகைத் தாதுக்களால் மனித உடல் அமைந்திருப்பது போல, கருங்கல், வெண்கல், செங்கல், மணல், சாம்பல், நீர், சுண்ணாம்பு எனப்படும் ஏழு வகைப் பொருள்களால் ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆலயத்தை ஒரு மனித உருவத்துடன் ஒப்பிட்டால் கர்ப்பக்கிரகம்தான் சிரசு (தலைப்பகுதி), அர்த்தமண்டபம்தான் கழுத்து, மகாமண்டபம்தான் மார்பு, யாகசாலைதான் நாபி (வயிறு), இராஜகோபுரம்தான் பாதம் எனலாம். இன்னொரு வகையில் ஆலயம் என்பதை உடலாகக் கொண்டால், இராஜகோபுரம்தான் வாய், நந்திதான் நாக்கு, கொடிமரம்தான் உள்நாக்கு, தீபங்கள் பஞ்ச இந்திரியங்கள், கர்ப்பக்கிரகம்தான் இதயம், மகாலிங்கம்தான் உயிர்.
ஒவ்வொரு சிவாலயத்திலும் ஐந்து வகையான லிங்கங்கள் இருப்பதாக ஐதீகம் 1. விமானம்- ஸ்தூல லிங்கம்; 2. கர்ப்பக்கிரகம்-சூக்ஷ்மலிங்கம்; 3. பலிபீடம்-அதிசூக்ஷ்மலிங்கம்; 4. கொடிமரம்-காரணலிங்கம்; 5. மூலலிங்கம்-மஹாகாரணலிங்கம்.
ஆலயத்தில் உள்ள மூலலிங்கம்தான் பதி, நந்திதான் பசு, பலிபீடம்தான் பாசம்; அதேபோல் கொடிமரம் தான் பதி; கொடிக்கயிறு சிவனின் திருவருள் சக்தி; கொடிச்சீலையில் வரையப்பட்டுள்ள நந்திதான் பசு; தர்ப்பையில் செய்யப்பட்டு கொடிமரத்தில் சுற்றப்படும் பிரிதான் பாசம்.
கோவில் உத்ஸவங்கள்: உத்ஸவம் (உத்-ஸவம்) என்பது சிருஷ்டி மார்க்கத்தைக் குறிப்பதாகும். உத் என்றால் சப்த பாஷிதம்; ஸவம் என்றால் சிருஷ்டி, அதாவது நன்மைகள் விருத்தியாகவே கோவிலில் உத்ஸவங்கள் நடத்தப்படுகின்றன. உத்ஸவங்கள் நடத்தாவிடில் மன்னனுக்கும் (ஆள்வோருக்கும்) நாட்டுக்கும் (குடிமக்கள்) கேடு விளையுமென ஞானேத்திரம் என்ற உபாகமம் கூறுகிறது. இயற்கை உத்பாதம், கிரகபீடை, மக்களுக்கு வியாதிகளால் ஆயுள் குறைதல் போன்ற கெடுதல்கள் ஏற்படலாம்.
உத்ஸவங்களில் ஆறு வகைகள் உண்டு. அவை: 1. பைத்ருகம் (பன்னிரண்டு நாள்கள்), 2. சௌக்யம் (ஒன்பது நாள்கள்), 3. ஸ்ரீகரம் (ஏழுநாள்கள்), 4. பார்த்திபம் (ஐந்து நாள்கள்), 5. சாத்விகம் (மூன்று நாள்கள்), 6. சைவம் (ஒருநாள்). ஒன்பது நாள்களுக்கு மேல் நடக்கும் உத்ஸவங்களுக்கே பிரம்மோத்ஸவம் என்று பெயர்.
யோகஜ ஆகமப்படி நடத்தினால், 1. கௌமாரம் (பதிமூன்று நாள்கள்), 2. சரவித்ரம் (பதினைந்து நாள்கள்), 3. சாந்த்ரம் (பதினேழு நாள்கள்). பதினேழு நாள்களுக்கு மேல் ஒரே சமயத்தில் உத்ஸவம் நடத்தக்கூடாது.
மாத-உத்ஸவங்கள்: சித்திரையில்-சைத்ரோத்ஸவம், வைகாசியில்-விசாகோத்ஸவம், (வசந்தோ-த்ஸவம்), ஆனியில்-ஆனித்திருமஞ்சனம், ஆடியில்-ஆடிப்பூர உத்ஸவம், புரட்டாசியில்-நவராத்ரி உத்ஸவம், ஐப்பசியில்-சூரசம்ஹாரம், கார்த்திகையில்-திருக்கார்த்திகை, மார்கழி-மாணிக்கவாசகர் உத்ஸவம், (திருவாதிரை-நடராஜர் தரிசனம்), தைமாதத்தில்-புஷ்போத்ஸவம், மாசியில்-மக உத்ஸவம் (பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம்), பங்குனியில்-பங்குனி உத்தரம்.
உத்ஸவம் தொடங்குவதற்கு முந்தைய நாளன்று அனுக்ஞை முதல் அங்குரார்ப்பணம் வரையிலான ஆகமக்கிரியையும் செய்து முடிக்கப்படும். உத்ஸவத்தின் முதல் நாளன்று காலையில் ரக்ஷாபந்தனம் (காப்புக்கட்டுதல்) ரிஷபயாகம் ஆகியவற்றை நடத்திவிட்டுக் கொடிமரத்தில் கொடியேற்றப்படும். அத்துடன் வாஸ்து சாந்தியும் செய்யப்படும். பத்ரகாளிக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதுடன், விநாயகருக்கு விசேஷ அபிஷேகம் செய்து அப்பம், மோதகம் ஆகியவை நிவேதனம் செய்யப்பட்ட பிறகுதான் உத்ஸவத்திற்கான கொடி ஏற்றுதல் காப்புக்கட்டுதல் ஆகியவை நடத்தப்படும்.
அத்துடன் தவில் எனப்படும் மேளத்திற்கும் பூஜை செய்யப்படும். அதன் மூலம் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சப்தமாதாக்கள், சூரியன், சந்திரன் ஆகியோர் திருப்திப்படுத்தப்படுவார்கள். அதனால் ராக்ஷஸர்கள், துர்தேவதைகள் ஆகியோர் ஆலயம் அமைந்திருக்கும் வட்டாரத்தை விட்டே ஓடிவிடுவார்கள் என்பது நம்பிக்கை. கொடி ஏற்றும்போது, முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள் ஆகியோரை சுலோகம் சொல்லி வரவழைக்க வேண்டும். உத்ஸவம் நடக்கும் ஒவ்வொரு நாளிலும், சுவாமியின் பிரதிநிதியாகிய அஸ்திரதேவரைப்-பல்லக்கில் வைத்து காலையும், மாலையும் சுவாமி புறப்பாட்டுக்கு முன்பு வீதிகளில் சுற்றிவரச் செய்ய வேண்டும். அப்படிச் சுற்றி வரும்போது எட்டுத்திக்குளையும் காக்கும் திக் பாலகர்களை மந்திரங்களாலும், இராகங்களாலும், தாளங்களாலும் சந்தோஷப்படுத்த வேண்டும். இதனால், நாட்டின் அந்தந்தப் பகுதிகளில் விஷஜுரம், வாந்திபேதி, அம்மை முதலிய நோய்கள் வராமல் தடுக்கப்படும். அத்துடன் துர்தேவதைகளால் இடையூறு இல்லாமல் உத்ஸவம் சிறப்பாக நடைபெறும்.
உத்ஸவத்தின் ஒவ்வொரு நாளும் காலையும், இரவும், ஆகமங்களில் குறிப்பிட்டிருப்பது போல, பொருத்தமான வாகனங்களில் சுவாமி அம்பாளுடன் பஞ்சமூர்த்திகளின் ஊர்வலம் நடைபெறும். அவ்வமயம் சுவாமிக்கு முன்பாக, நாதஸ்வர இசை, நாட்டியம், கரகம் போன்ற கிராமிய நிகழ்ச்சிகளும், சுவாமிக்குப் பின்புறமாக வேதபாராயணங்களும் நடைபெறும். வேதவிற்பன்னர்கள் ஊர்வலத்தில் சுவாமியைத் தொடர்ந்து வருவார்கள். உத்ஸவத்தின் ஏழாம் நாள் அல்லது ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறவேண்டும்.
உத்ஸவத்தின் போது தவறாமல், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், மிருத்சங்கிரஹணம், ரக்ஷாபந்தனம், கொடியேற்றம் ஆகிய ஐந்தும் நடைபெறவேண்டும். இவை பஞ்சகிருத்யம் எனப்படும். யாக பூஜை, ஹோமம், அஷ்டதிக்-பலி, தேரோட்டம், திருக்கல்யாணம் ஆகியவையும் நடத்தப்படும்போது உத்ஸவம் முழுமை பெறுகிறது.
புதிதாக ஆலயம் நிர்மாணித்தல்: புதிய ஆலயத்தை நிர்மாணிக்கப் பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்தல் மிகவும் முக்கியம். அந்த நிலப்பரப்பு தூய்மையானதாகவும், சமதளமாகவும், தோஷங்கள் இல்லாததாகவும் இயற்கை எழில் நிறைந்ததாகவும் இருக்க வேண்டுமென ஆகமங்கள் வலியுறுத்துகின்றன. அந்த இடத்தைச் சுற்றி வளர்ந்திருக்கும் தாவரங்களின் வகைகளிலிருந்தே அந்தப் பூமியின் இயல்பை அறிந்து கொள்ளலாம். ஆகவேதான் நமது பழைமையான ஆலயங்களெல்லாம் மலை உச்சிகளிலும் சோலைகளிலும் நதிக்கரைகளிலும் காணப்படுகின்றன. ஆலய நிலத்தை சுபத்மம், பத்ரம், பூர்ணம், தூம்ரம் என நான்கு வகையாகப் பிரித்திருக்கின்றன ஆகமங்கள்.
அத்தகைய சமதள நிலப்பரப்பைத் தேர்ந்தெடுத்த பின் வாஸ்து சாஸ்திரப்படி, அங்கு வாஸ்து புருஷ மண்டலம் எனப்படும் வரைபடம் ஒன்று வரையப்பட வேண்டும். அந்த வரைபடம் தான் ஆலயத்தின் உத்தேச அடித்தளம் அமைக்க உதவும். அத்தகைய வரைபடம் வரைந்த பிறகே ஆலயத்துக்கான கட்டட வேலைகளைத் தொடங்க வேண்டுமென ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.
அதர்வண வேதத்தின் ஒரு முக்கிய அங்கமான “ஸதாபகத்திய சாஸ்திரவேதம்” என்ற பகுதி ஆகமக்கலையில் ஒரு முக்கிய நூலாகும். அதைத்தான் வாஸ்து சாஸ்திரம் என்று கூறுகிறார்கள். அதன்படி, அந்தகாசுரன் என்பவன் சிவபெருமானுக்கு எதிரில் வந்து நின்று அவரைப் போருக்கு வரும்படி ஆர்ப்பரித்தானாம். அதனால் சிவபெருமான் கோபம் கொண்டார். அவரது கோப ஆவேசத்தின் காரணமாக ஏற்பட்ட வியர்வைத்துளிகள் தரையில் வீழ்ந்தன. அதிலிருந்து ஒரு பூதம் தோன்றியது. அந்தப் பூதம் சிவபெருமானின் குறிப்பை உணர்ந்து அந்தகாசுரனைக் கொன்று அவனது ரத்தத்தைக் குடித்துத் திருப்தி அடைந்ததாம். பின்னர் அது சிவனைக் குறித்துத் தவம் செய்து அவரிடமிருந்து பல வரங்களைப் பெற்றது. அந்த மமதையில் அதுவும் தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கியதாம்! தன்னிடம் அடைக்கலமாகத் தஞ்சமடைந்த தேவர்களைக் காப்பதற்காக சிவன் 'அதிபலர்' என்ற ருத்ரரையும் எட்டு மாயா பாசங்களையும் சிருஷ்டித்தார். அதிபலர் அந்த எட்டுப் பாசக்கயிறுகளாலும் அந்தப் பூதத்தைக் கட்டித் தரையில் குப்புறத் தள்ளினாராம். பிறகு அந்தப் பூதத்தின் சரீரத்தில் பாதம் முதல் சிரசுவரை பிரம்மா முதலான ஐம்பத்து மூன்று தேவர்களை கிரமமாக வசிக்கச் சொன்னாராம் சிவபெருமான். அந்தத் தேவர்களின் பாரத்தினால் அழுந்தப்பெறும் அந்தப்பூதம், தரையிலேயே கிடந்து அப்படியே உறங்கிவிட்டதாம். இப்போதும் எப்போதும் தூங்கிக்கொண்டேதான் இருக்கிறதாம். எப்போதாவது தான் விழிக்குமாம். தேவர்கள் அந்தப் பூதத்தின் மீது வசிப்பதால் அதற்கு வாஸ்து புருஷன் என்ற பெயர் வந்தது.
ஆகவே பூமியின் எந்தப் பகுதியில் எப்படிப்பட்ட கட்டடங்களை எழுப்புவதானாலும், உத்ஸவங்கள் நடத்துவதானாலும் வாஸ்துவை சாந்தி செய்தபிறகே பணியைத் தொடங்க வேண்டுமென ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.
அதன்படி, நிலத்தைத் தேர்ந்தெடுத்து 'வாஸ்து புருஷ மண்டலம்' வரைந்த பிறகு, அதை அறுபத்து நான்கு அல்லது தொண்ணூற்றி ஒரு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு பகுதிக்கும் உரிய தேவதையை அங்கு ஆவாஹனம் செய்து பூஜை செய்தபிறகே ஆலயத்துக்கான ஆதாரக்கல்லை (அடிக்கல்லை) நாட்ட வேண்டும். அந்தக்கல் சதுர வடிவில் நடுவில் குழிந்தும் இருக்க வேண்டும். அக்குழியில் நவதானியங்களைப் போடவேண்டும். அதன்மேல் ரத்தினங்கள் நிரம்பிய ஒரு சிறிய கலசத்தை வைத்து தாமரை மலர் வடிவம் செதுக்கப்பட்ட கல்லால் மூட வேண்டும்.
அடுத்தது கட்டட வேலை தொடங்குதல், அதற்காகத் தகுதியுள்ள சிற்பி ஒருவரையும் அவரது உதவியாளர்களையும் தேர்ந்தெடுத்து நியமித்து பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். ஸ்தபதி (தலைமைச் சிற்பி) சூத்ரதாரர் (நூலினால் அளவை செய்பவர்) தட்சகர் (கற்களை வெட்டச் செதுக்குபவர்) வர்த்தகி (வண்ணப்பூச்சு கொடுப்பவர்) ஆகிய நால்வரும்தான் ஆலய நிர்மாணித்தலில் பெரும் பொறுப்பு வகிப்பவர்கள்.
அக்னி புராணம், மத்ஸ்யபுராணம், கருடபுராணம் ஆகியன சில்பசாஸ்திரம் பற்றியும் சிற்பிகளின் பணிகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. சில்பசாஸ்திரம் பிரம்மதேவனிடமிருந்து பெறப்பட்டு கர்க்கர் போன்ற முனிவர்கள் மூலமாக எல்லாருக்கும் பரவலாக்கப்பட்டது. அந்த சாஸ்திரமே ஆகமங்களால் அங்கீகரிக்கப்பட்டு, ஆகமங்களுடன் இணைந்து இன்று வரை பாரம்பரியமாகப் பின் பற்றப்பட்டு வருகின்றன.
முற்கால ஆலயங்களில் கர்ப்பக்ருகத்துக்கு மேலுள்ள விமானம்தான் முக்கிய பகுதியாக இருந்தது. அப்போதெல்லாம் இராஜகோபுரங்கள் இருந்ததில்லை. பத்தாம் நூற்றாண்டில் சோழதேசத்தில் எழுப்பப்பட்ட ஆலயங்களில்தான் நுழைவாயிலுக்கு மேல்பகுதியில் கோபுரங்கள் கட்டும் வழக்கம் தோன்றியது. அதற்கு முதலாவது முக்கிய உதாரணம் தஞ்சாவூரிலுள்ள பிரகதீஸ்வரர் ஆலயம்தான். அங்கு இரண்டு நுழைவாயில்களுக்கு மேல் இரு கோபுரங்கள் காணப்படுகின்றன. ஆந்த ஆலயத்தை நிர்மாணித்தவன் இராஜராஜசோழன் என்பதால் அவை “இராஜ கோபுரங்கள்” என்று அழைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து பின்னாளில் மதுரை, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாரூர், திருநெல்வேலி, சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் உள்ள ஆலயங்களில் அத்தகைய இராஜகோபுரங்கள் கட்டப்பட்டன. அவற்றை சோழர்களும், பாண்டியர்களும், பல்லவர்களும், விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரும் நிர்மாணித்தனர். அத்தகைய இராஜகோபுரங்கள் கர்ப்பக்ரகத்திற்கு மேலுள்ள விமானங்களை விடப் பெரியதாகவும், மிக உயரமாகவும் கட்டப்பட்டன. ஆனால் தஞ்சைப் பெரிய கோவிலின் விமானம்தான் இன்றளவும் சில்ப சாஸ்திரத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகமசாஸ்திரப்படி எந்தவோர் ஆலய நிர்மாணத்திலும் முதலில் கர்ப்பக்ரகமும் அதன் மீது விமானமும்தான் எழுப்பப்பட வேண்டும்.
கர்ப்பக்ரகத்தின் உட்சுவரும் வெளிச்சுவரும் எழுப்பப்பட்டதும், அதைச் சுற்றி அந்தராளம் என்னும் சுற்றுப்பாதை அமைக்க வேண்டும். இது கர்ப்பக்ரகத்தில் எழுந்தருளியுள்ள மூலவரை வலம் வருவதற்கான வழியாகும். பெரிய ஆலயங்களில் மட்டுமே இத்தகைய பிரதட்சணப் பாதையைக் காண முடியும்.
பின்னர், அர்த்தமண்டபம், மகாமண்டபம், நந்தி அல்லது பிற வாகனம், பலிபீடம், கொடிமரம் ஆகியவை நிறுவப்பட வேண்டும். தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கான மாடங்களும் சந்நிகளும் கட்டப்பட வேண்டும். இறுதியாகத்தான் ஆலயத்திற்கான சுற்றுச்சுவர் (மதில்) பிற பிராகாரங்கள், தலைவாசல், அதன் மீது இராஜகோபுரம் ஆகியவற்றை அமைக்க வேண்டும்.
பிறகு கர்ப்பக்ரகத்தில் அஷ்டபந்தனம் கொண்டு மூலவரை பீடத்தின் மீது நிறுவ வேண்டும். அதற்கு கும்பாபிஷக வைபவத்தையும் நிறைவேற்றி யாகசாலையில் கலசங்களில் தேவதைகளை ஆவாஹனம் செய்த புனித நீரை எடுத்துச் சென்று கர்ப்பக்ரகத்துக்கு மேலுள்ள விமானத்தின் உச்சியில் நிறுவப்படும் கலசங்கள் மீது தெளிக்க வேண்டும். அவ்வாறே பிற சந்நிதிகளின் மீதுள்ள விமானங்களிலும் இராஜகோபுரத்தில் உள்ள கலசத்தின் மீதும் தெளிக்க வேண்டும்.
நமது பாரதநாட்டு ஆலயங்கள் நாகரம், திராவிடம், லேசரம் என்று மூன்று பாணிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கர்ப்பக்ரக விமானத்தின் சிகரமே மிக முக்கியமானது. அங்குள்ள ஸ்தூபிகையே ஆலயத்தின் உச்சிப்பகுதியாகிறது.
ஆலயவிமானத்தின் சிகரப்பகுதி (ஸ்தூபிகைக்கு அடித்தளமாக உள்ளது) சதுரவடிவமாக இருந்தால் அது நாகரம் எனப்படும். ஆறு ஆல்லது எட்டுக்கோணங்களைக் கொண்டிருந்தால் அது திராவிடம் எனப்படும். வட்டவடிவமாக இருந்தால் அது லேசரம் ஆகும். ஆலயம் நிர்மாணிக்கப்படும்போது கூடவே தீர்த்தம் எனப்படும் திருக்குளமும் உருவாக்கப்பட வேண்டும். பக்தர்கள் நீராடித் தம்மைத் தூய்மைப் படுத்திக்கொண்டு
ஆலயத்துக்குள் நுழைவதற்காகவே திருக்குளங்கள் வெட்டப்பட்டன.
ஆலயத்தை நிர்மாணித்தவுடன், கும்பாபிஷேகத்துக்கு முன்பே தகுதியான அர்ச்சகர்கள், அத்யயன பட்டர்கள், சுயம்பாகிகள், நாதஸ்வர வித்வான்கள், தேவாரம், திருமுறைகளை ஓதுபவர்கள் ஆகியோரை நியமித்துவிட வேண்டும். ஏனெனில் அப்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெறும் போதும், நடந்து முடிந்த உடனேயும் அவரவர் தத்தம் பணிகளைத் தொடங்க முடியும்.
வேதங்களும் ஆகமங்களும் சிவபெருமானிடமிருந்து தோன்றியவைதான். ஆனால் இன்று வேதங்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருப்பவர்களுக்குக் கூட ஆகமங்களைக் குறித்து அதிகம் தெரிவதில்லை. ஏனெனில் முப்புரிநூல் (பூணூல்) அணிந்த எந்தவோர் அந்தண இளைஞரும் வேதபாடசாலைகளில் வேதங்களைப் பயிலலாம். அத்யயனம் செய்யலாம்; அத்யயன பட்டராகப் பணியாற்றலாம்; ஆனால் அதே வேத பாடசாலையில் வேதங்களுடன் சிவாச்சாரியார், பட்டாச்சாரியார் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஆகமங்களையும் கூடவே பயில வேண்டும். அவ்வாறு பயில அவர்கள் சிவதீட்சை பெறுவது முக்கியம். அத்யயனம் செய்பவர்களுக்கு சிவதீட்சை முக்கியமில்லை. அதனால்தான் சிவதீட்சை பெற்றுக்கொண்ட ஆகம சிவாச்சார்யார்கள், அர்ச்சகர்களாகச் சிவாலயங்களில் கைங்கர்யம் செய்ய வேண்டுமென ஆகமங்கள் சொல்கின்றன.